தலித் மக்கள் மீது இந்துக்கள் திணித்துள்ள ஜாதியையும் -
ஜாதிய அடையாளங்களையும் முற்றாக ஒழித்துக் கட்டாமல்,
அவற்றை வளர்த்தெடுத்தால், அது எத்தகைய ஆபத்தான
நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதற்கு - விருதுநகர்
மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு புதுப்பட்டி ஓர்
எடுத்துக்காட்டு. கடந்த இரு மாதங்களாக, இங்குள்ள
இரு பட்டியல் சாதியினரிடையே நடைபெற்று வரும்
மோதல்களைத் தொடர்ந்து, இரு தரப்பிலும்
ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். இது, இந்த
மாவட்டத்தில் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வரும்
தனித்ததொரு பிரச்சினை என்றாலும், தேர்தல் நெருங்கும்
தருணத்தில் இதுபோன்ற அருவெறுப்புகள், பிற இடங்களுக்கும்
பரவும் பேராபத்து இருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளாக, இப்பகுதி மக்களிடையே
நீடித்துவரும் பகைமைக்கு, உட்சாதி முரண்பாடுகளைத் தவிர,
வேறு எந்த காரணமும் இருப்பதாகக் கண்டறிய
முடியவில்லை. இம்முரண்களைத் தீர்க்கவும்,
நல்லுறவை வளர்த்தெடுத்து, ஒற்றுமையைப்
பேணியிருக்கவும் வேண்டிய இரு முக்கிய தலித் கட்சிகளின்
அலட்சியம் - இம்முரணை மேலும் கூர்மையாக்கியுள்ளது.
அது மட்டுமல்ல, இத்தகைய பிரிவினைகளே இவர்களுடைய
கட்சிகளை வளர்க்கும் மூலதனமாகவும் இருக்கின்றன!
இவ்வரலாற்றுக் குற்றத்தை பிற கட்சிகள், அமைப்புகள்,
அறிவுஜீவிகள் என அனைவரும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சாதிய சமூக அமைப்புக்கு எதிராகத் திரண்டெழுந்து
போராடுவது நம் லட்சியமாக இருந்திருக்குமானால்,
இத்தகைய மோதல்களுக்கும், அதற்கு வழிவகுக்கும்
உட்சாதி புனைவுகளுக்கும் எந்த முகாந்திரமும்
இருந்திருக்காது. அம்பேத்கரியத்தை உள்வாங்கிக் கொள்ளாத
அறிவு ஜீவிகள், அரைகுறை அறிவாளிகள், மற்றவர்களின்
உட்சாதியை காரணமாக்கியே தங்களுடைய உட்சாதி
உணர்வை நியாயப்படுத்திக் கொள்ளும் அமைப்புகள்/
செயல்வீரர்கள், இவர்களுக்கான தத்துவங்களை
உருவாக்கிவரும் விளிம்புநிலை "வரலாற்று ஆய்வாளர்'கள்
ஆகியோரே இச்சிக்கலை மோதலாக வளர்த்தெடுத்த
காரணிகள். இத்தகைய மோதல்களைத் தடுக்க, உட்சாதி
வீரர்கள் என்ன தீர்வை வைத்திருக்கிறார்கள்? "உட்சாதி
பிரிவுகளும் அமைப்புகளும் இருக்கலாம்; ஆனால்
ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளக் கூடாது' என்ற
கடைந்தெடுத்த அயேõக்கியத்தனத்தைதான் இவர்களால்
தீர்வாக சொல்ல முடிகிறது!
வர்ணாசிரமம் பொய் என்பது எந்தளவுக்கு உண்மையோ,
அந்தளவுக்கு சாதியும்/உட்சாதியும் பொய். இதன் மீது
கட்டப்படும் எத்தகைய அடித்தட்டு வீரக் கதையாடல்களும்
பொய்யாகவே இருக்க முடியும்.
சாதியவாதிகளுக்கும் உட்சாதியவாதிகளுக்கும் எந்த
வேறுபாடும் இல்லை. தலித், அருந்ததியர் எனப் பிரித்து
செயல்படும் மார்க்சிஸ்டுகளுக்கும் இப்பிரச்சினை ஒரு பாடம்.
உட்சாதிப் பெருமைகளால் அருந்ததியர்களும், புதிரை
வண்ணார்களும் பலியாக்கப்படுகிறார்கள் என்கிற
உண்மைகூடவா இவர்களுக்கு உறைக்கவில்லை?
பன்னூற்றாண்டுகளாக நம்மை ஒடுக்கி, நம்மீதான
இழிவுகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருக்கும்
சாதியத்திற்கும், சாதி அடையாளங்களுக்கும் முற்றிலும்
எதிரான, ஒரு பொது அடையாளத்திற்குள் தலித்துகள்
அணியமாவதை எது தடுக்கிறது? சாதி அடையாளத்தை
சுமக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றவர்களின் இலக்கு
என்ன? சாதி இந்துக்களுக்கு வேண்டுமானால்,
இழிவான சாதி அடையாளங்கள் பெருமையாக
இருக்கலாம். அதேபோன்ற அடையாளங்களை
நம்மீது வரித்துக் கொள்வது (சமஸ்கிருதமயமாக்கல்),
நம்மை இந்து புதைகுழிக்குள் வீழ்த்தி, கொல்லும் சதித்
திட்டமேயன்றி வேறென்ன?
பிறப்பின் அடிப்படையில் சமத்துவத்தை மறுக்கும்
ஜனநாயகமற்ற ஒரு நிறுவனமே சாதி அமைப்பு.
இதற்கு அங்கீகாரம் வழங்கி, ஆதிக்கம் செலுத்தும்
சுரண்டல் அமைப்புக்குப் பெயர்தான் இந்து மதம்.
காலங்காலமாக இடஒதுக்கீடு கேட்டும்,
தங்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்தும்,
அரசியல் அதிகாரத்திற்காகவும், பொருளியல்
முன்னேற்றங்களுக்கும் குரல் கொடுக்கக்கூடிய
தலித் அமைப்புகள் - இன்றளவும் நம்முடைய
கேடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருக்கும்
இந்து மதத்தை கேள்வி கேட்கவோ, அதை
மறுதலிக்கவோ முன்வரவில்லை என்பது ஒரு
சமூகக் குற்றம். தலித்துகள் இதிலிருந்து விடுதலை
பெறுவது தான் அம்பேத்கரியப் புரட்சி. இந்து அடிமைகளாக
இருந்து கொண்டு சுகம் காண்பதும், உரிமைகளைக்
கோருவதும் எதிர்ப்புரட்சி.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை
அளித்து - அம்பேத்கரியவாதிகள், அறிவு ஜீவிகள்,
பத்திரிகையாளர்கள், சமூக நீதி சிந்தனையாளர்கள்
ஒரு குழுவாக இப்பகுதிகளுக்கு சென்று தீவிரப்
பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அம்பேத்கர்
நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்குப் பிறகு
தலித்துகளிடையே உருவான எழுச்சியும்
உத்வேகமும், 20 ஆண்டுகளிலேயே திசைமாறி,
அதிலும் குறிப்பாக அம்பேத்கர் சிலையையொட்டியே
சர்ச்சை உருவாகும் எனில் (வத்திராயிருப்பு
புதுப்பட்டியில் உள்ள அம்பேத்கர்
சிலையே அரசியலாக்கப்பட்டிருக்கிறது), இதைவிட
பெரிய துரோகத்தை யாரும் அவருக்கு செய்துவிட முடியாது.
தலித் முரசு ஆசிரியர் குழு வியாழன், 14 அக்டோபர் 2010