Sunday, February 12, 2012

ப‌றைய‌ர்க‌ள் தொட்ட‌ த‌ண்ணீர் தீட்டா..?


வ‌ழ‌க்க‌மான‌ இந்திய‌ கிராம‌ங்க‌ளின் பொதுப்ப‌ண்பாகிய‌ ஊர்/சேரி என்னும் க‌ட்ட‌மைப்பில் பூகோள‌ரீதியான‌ பிரிவுக‌ளும் த‌ன‌க்குள் கொண்டுள்ள‌துதான் கடலூர் மாவட்டம் கீழ்சாத்த‌ம‌ங்க‌ல‌ம். சேரிப்ப‌குதியின் நுழைவுவாயில் "அம்பேத்க‌ர் பெண்கள் ப‌குத்த‌றிவு ச‌ங்க‌ம்" என்ற‌ பெய‌ரினைத் தாங்கிய‌ ப‌ல‌கை ச‌ரிந்து விழுந்து கிட‌க்கிற‌து. சேரிப்ப‌குதியின் ஒவ்வொரு த‌லித் குடும்ப‌ங்க‌ளின் வீட்டின் வ‌ர‌வேற்ப‌ரையிலும் பாபாசாஹேப்.அம்பேத்‌க‌ர் புகைப்ப‌ட‌த்தினை க‌ண்க‌ள் தாவிக் க‌வ்வுகிற‌து.
"யாருங்க‌ இப்ப‌ல்லாம் சாதி பாக்குறாங்க‌? முத‌ல்ல‌ மாதிரி இப்ப‌ கிடையாது" என்று, எல்லாம் மாறிவிட்ட‌து போன்ற‌ ப‌ச்சைப்புளுகை பொதுப்புத்தியில் நின்று பேசுப‌வ‌ர்க‌ளுக்கு முக‌த்தில் அடிப்ப‌து போல் இருந்த‌து அந்த‌க் காட்சி.
வாக‌ன‌ங்க‌ள் வீடுக‌‌ள் என‌ அனைத்தும் தலைவிரிகோல‌மாய் காட்சிய‌ளித்த‌து ஊரில். கார‌ண‌ம் தானே புய‌ல் என‌ நினைத்தால் அதுதான் இல்லை. கால‌ங்கால‌மாய் அடிக்க‌டி ஊர் தெருவிலிருந்து சேரிக்கு க‌ட‌க்கும் புய‌ல்.. சாதிவெறிப் புய‌ல்..
இத்த‌னை காலமாய் இல்லாத‌ த‌ண்ணீர்ப் பிர‌ச்சினை இப்பொழுது ம‌ட்டும் ஏன்?
31.12.2011. தானே புய‌லின் தாக்குதலில் மின்சார‌ம் இழ‌ந்த‌ ம‌க்க‌ள், குழாயில் த‌ண்ணீர் வ‌ராத‌தினால் குடிக்க‌ நீரின்றி இருந்த‌ன‌ர். ஊருக்கும், சேரிக்கும் இடைப்ப‌ட்ட‌ பகுதியில் ஒரு த‌ண்ணீர்த் தொட்டி உள்ள‌து. அந்த‌ த‌ண்ணீர்த் தொட்டியில் சேரிப்ப‌குதியினை சேர்ந்த‌ ம‌க்க‌ள் த‌ண்ணீர் எடுக்க‌ச் சென்றுள்ள‌ன‌ர். த‌ண்ணீர்த் தொட்டிக்கு மேலே சென்று, தொட்டியின் மூடியைத் திறந்து நீர் இறைத்துள்ள‌ன‌ர். சேரிக்கார‌ன் சுவாசித்த‌ காற்றை தான் சுவாசித்தாலே தீட்டு என்று காற்று ஊரைத் தாண்டி சேரிக்குள் ப‌ய‌ணிக்குமாறு, குடியிருப்பை ஏற்ப‌டுத்திக் கொண்ட‌வ‌ர்க‌ளின் த‌லைமுறையால் சும்மா இருக்க முடியுமா?
கிளம்பியது கம்பு, கட்டையோடு... சேரியையே அடித்து துவம்சம் செய்துவிட்டது. 1.1.2012ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கியது 8 மணி வரை அரங்கேறியிருக்கிறது வன்முறை. வயது பாரபட்சமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமத்துவமாய் தாக்குதல் நிகழ்ந்திருகிறது; வன்மம் பாய்ச்சப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களின் இந்த தண்ணீர் எடுக்கும் 'திமிருக்குக்' காரணம் பொருளாதார நிமிர்வு என்று அதை அடக்க உயிரற்ற, சாதி தெரியாத வண்டிகளை அடித்து நொறுக்கி, குப்புற கவிழ்த்துவிட்டுப் போயிருக்கிறது அந்த கூட்டம்.
த‌ண்ணீர் தொட்டியின் பிண்ண‌னி:
அர‌சின் வ‌ழ‌க்க‌மான‌ செய‌லான‌ த‌லித் விரோத‌த்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தான், "த‌லித் ம‌க்க‌ளுக்கென‌ ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ நிதியை பொதுப்ப‌ணிக்கென‌ செல‌விடுத‌ல்".. அதுதான் கீழ் சாத்த‌ம‌ங்க‌ல‌த்திலும் நிக‌ழ்ந்துள்ள‌து.
த‌ண்ணீர்த் தொட்டி அமைந்துள்ள‌ இட‌ம், கீழ்சாத்த‌ம‌ங்க‌ல‌ம் சேரிப்ப‌குதி ம‌க்க‌ள் கால‌ங்கால‌மாய் பய‌ன்ப‌டுத்தி வ‌ந்த‌து. அந்த‌ இட‌த்தில் தான் அங்கேயுள்ள‌ த‌லித் ம‌க்க‌ளின் குல‌ தெய்வ‌ வ‌ழிபாடான‌ ஐய்ய‌னார் கோவில் இருந்து வ‌ருகிறது. அவ்விட‌த்தினை ஆக்கிர‌மிப்பு செய்வ‌தினையே குறிக்கோளாக‌க் கொண்டிருந்த‌து வ‌ன்னிய‌ ஆதிக்க‌ச் ச‌மூக‌ம். அத‌னினை அறிந்த‌ த‌லித் ம‌க்க‌ள், அங்கே குடிசைக‌ள் க‌ட்டி வாழ‌த் தொட‌ங்கின‌ர். த‌ங்க‌ள் நிதியிலிருந்து த‌ண்ணீர்த் தொட்டி வ‌ர‌ப்போகிற‌து என்ப‌தினை அறிந்த‌ அப்பாவி த‌லித் ம‌க்க‌ள், த‌ங்க‌ளுக்காக‌த் தான் அத்தொட்டி என‌ எண்ணி இட‌ம‌ளித்த‌ன‌ர். நீர்த்தொட்டியும், அத‌ன‌ருகே உள்ள‌ ஐய்ய‌னார் கோவிலையும், த‌லித் சிறுவ‌ர்க‌ளின் விளையாட்டுத் திட‌லையும் சேர்த்து, நீர்த்தொட்டி அமைக்க‌ப்ப‌டும்பொழுது ஒரு சுற்றுச் சுவ‌ர் அமைக்க‌ப்ப‌ட்ட‌து.
நீர்த்தொட்டியின் நீர் ஊர்ப் ப‌குதிக்கும், சேரிப்ப‌குதிக்குமாக‌ பொதுவான‌தாக‌ இருந்துவ‌ந்த‌து. அப்ப‌டியான‌ ஒரு கால‌க‌ட்ட‌த்தில், தானே புய‌லின் தாக்குத‌லில் சிக்கிய‌ சேரிப்ப‌குதி ம‌க்க‌ள், கடந்த டிசம்பர் 31ம் தேதி மின்வ‌ச‌தி இல்லாத‌ கார‌ண‌த்தினால், த‌ண்ணீர்த் தொட்டியில் நீர் இறைத்துள்ள‌ன‌ர். //ப‌றைய‌ன் தொட்ட‌ த‌ண்ணீரை, உய‌ர்சாதியின‌ரான‌ நாங்க‌ள் எப்படி குடிப்ப‌து// என‌ பெண்க‌ள் ஒன்று திர‌ண்டு, விளையாடும் சிறார்க‌ளை நீர்த்தொட்டியின‌ட‌மிருந்து விர‌ட்டிய‌டித்ததோடு ம‌ட்டுமில்லாம‌ல், சேரியின் எல்லை வ‌ரை வ‌ந்து, த‌காத‌ வார்த்தைக‌ளினாலும், சாதியைச் சொல்லி இழிவுப‌டுத்தியும் பேசியுள்ள‌ன‌ர்.. இத‌னால், த‌லித் ம‌க்க‌ள் ம‌ன‌முடைந்த‌ன‌ர். காவ‌ல் நிலையும் சென்று புகார் அளிக்க‌ முற்ப‌ட்ட‌ன‌ர்.. திண்ணிய‌த்தில் ம‌ல‌த்தை திணித்த‌ பொழுதே, தாம‌த‌மான‌ புகார் என்று கூறி முத‌ல் த‌க‌வ‌ல‌றிக்கை ப‌திவு செய்ய‌த் த‌ய‌ங்கிய‌ பெருமைமிகு காவ‌ல் துறைய‌ல்லவா ந‌ம்முடைய‌து. ஆளும் வ‌ர்க்க‌த்தின‌ர்க்கும், ஆதிக்க‌சாதிக்கும், கைக்கூலியாக‌ செய‌ல்ப‌ட்டு வ‌ரும் காவ‌ல் துறையின் த‌லித் விரோத‌ப்போக்கினை ப‌ர‌ம‌க்குடியிலும் க‌ண்டுவிட்டோம். இங்கேயும், பிர‌ச்சினைக்குப் பிற‌கும், காவ‌ல்துறை த‌லித் ம‌க்க‌ளுக்கு பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌வில்லை..
ப‌றைய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு எதிராக‌ காவ‌ல் நிலைய‌ம் செல்லும் தைரிய‌த்தினைக் க‌ண்ட‌ வ‌ன்னிய‌ ஆதிக்க‌ வெறி பிடித்த‌ ம‌க்க‌ள் சுமார் 300 பேர் திர‌ண்டு சேரிப்ப‌குதி வ‌ந்த‌ன‌ர், கையில் க‌ம்பு, இரும்பு கோடாரிக்கட்டைக‌ளோடு. ஆண், பெண், வ‌ய‌தான‌வர்க‌ள் என்ற பாராப‌ட்ச‌மின்றி, க‌ண்ணில் தென்ப‌ட்ட‌ அனைத்து த‌லித் ம‌க்க‌ளையும் அடித்து உதைத்த‌ன‌ர். 2 ம‌ணி நேர‌ம் தொட‌ர்ந்து ந‌ட‌ந்த‌து இந்த‌த் தாக்குத‌ல், இர‌‌ண்டே காவ‌ல் துறை அதிகாரிக‌ள், ஆதிக்க‌ சாதியின‌ரை த‌டுக்க‌வும் முடியாம‌ல்..த‌லித் ம‌க்கள் செத்தார்க‌ளா அல்ல‌து உயிர் இன்ன‌மும் கையில் பிடித்து வைத்திருக்கார்க‌ளா என‌க் காண கடைசியில் காவ‌ல் துறை வ‌ந்த‌து.
"காவல்துறையும், குற்றவியல் நடுவர் துறையும் இந்துவின் பக்கமே இருக்கின்றன. தீண்டப்படாதோருக்கும், இந்துக்களுக்கு இடையே நடைபெறும் சச்சரவில் தீண்டப்படாதோர் காவல்துறையிடமிருந்து பாதுகாப்பையோ, நீதித்துறையிடமிருந்து நீதியையோ எதிர்ப்பார்க்க முடியாது. காவல்துறையினரும், நீதித்துறையினரும் இந்துக்கள், அவர்கள் தங்கள் கடமையைவிட தங்கள் இனத்தையே பெரிதும் நேசிக்கின்றனர்." - டாக்ட‌ர்.பாபாசாஹேப் அம்பேத்கர்
ஆதிக்க‌ சாதியின் வெறியினை, ஊட‌க‌ங்க‌ள், செய்தித்தாள்க‌ள் இருத‌ர‌ப்பு மோத‌லாக‌ வெளியிட்டுள்ள‌து. ஊர் செய்தி, உல‌க‌ச்செய்தி, முத‌ல்வ‌ர் வீட்டுச் செய்தி, ந‌டிகைக‌ளின் அந்த‌ர‌ங்க‌ம்,ரேட் என்று விப‌ர‌மாக‌த் தேடித்தேடி செய்தி வெளியிடும் தின‌ம‌லர் என்னும் பார்ப்ப‌ன‌ ஏடு, மேற்க‌ண்ட‌ த‌க்குத‌லை இருத‌ர‌ப்பு மோத‌ல் என்று செய்தி வெளியிட்டுள்ள‌து. http://election.dinamalar.com/local/election_news_detail.php?id=382999
இப்பிர‌ச்சினை குறித்து பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் க‌ருத்து:
உண்மை அறியும் குழு 13.1.2012 அன்று கீழ்சாத்த‌ம‌ங்க‌ல‌ம் சென்றது. அண்ண‌ல் அம்பேத்க‌ர் ப‌குத்த‌றிவு பெண்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌த் த‌லைவியும், வார்டு மெம்ப‌ருமான‌ முருக‌ம்மாள் குழுவிடம் கூறிய‌தாவ‌து, "எங்க‌ளை மிக‌வும் கேவ‌லமான‌ முறையில் தாக்கினார்க‌ள். நாங்க‌ள் பய‌ந்து ஒளிந்து கொண்டோம். எங்க‌ள் வாக‌ன‌த்தினை கொளுத்திவிட்ட‌ன‌ர். சேரியில் உள்ள‌ அனைத்து ம‌க்க‌ளும் சித‌றி ஓடி விட்ட‌ன‌ர். காவ‌ல் நிலைய‌த்தில் எங்க‌ளுடைய‌ புகார் வாங்க‌ப்ப‌டவில்லை.. நாங்க‌ல் முத‌ல் த‌க‌வ‌ல‌றிக்கை ப‌திவு செய்ய‌வே நிறைய‌ போராடிவிட்டோம்" என்றார்.
பார‌தி கூறிய‌தாவ‌து, "எங்க‌ளையெல்லாம் கொடூர‌மான‌ முறையில் தாக்கின‌ர்.. ப‌க‌லில் ந‌ட‌ந்த‌து இது. காவ‌ல் துறை வ‌ர‌வில்லை. அத‌ன் பிற‌கு வ‌ந்து பார்வையிட்ட‌ இன்ஸ்பெக்ட‌ர் பாஸ்க‌ர், நாங்க‌ளெல்லாம் தொட்டியை அசிங்க‌ம் செய்துவிட்ட‌தாக‌க் கூறினார். சிறுவ‌ர்க‌ள் அங்கே சிறுநீர் க‌ழிப்ப‌தாக‌வும், ம‌ல‌ம் க‌ழிப்ப‌தாகவும் சொல்கின்ற‌ன‌ர்.. நாங்க‌ளும் அந்த‌ த‌ண்ணியைத் தான் குடிக்கிறோம், நாங்க‌ளே எப்ப‌டி அப்ப‌டிலாம் செய்வோம்? அதும‌ட்டுமில்லாம‌ல், பாஸ்க‌ர் இன்ஸ்பெக்ட‌ர், சாதி ரீதியாக‌ கேவ‌ல‌மாக‌ பேசியுள்ளார் என்றும் கூறினார். "எங்க‌ புது வ‌ண்டியை கொளுத்திட்டாங்க‌. எதை வ‌ச்சு நாங்க‌ கீழ்ச் சாதி... எங்க‌ உட‌ம்பிலும், அவ‌ங்க‌ உட‌ம்பிலும் இர‌த்த‌ம் தான‌ ஓடுது?" என்ற அவ‌ர‌து கேள்வி, சாதி வெறியின‌ரை செருப்பால் அடித்த‌த‌ற்குச் ச‌ம‌ம்.
வ‌ள‌ர்ம‌தி என்ப‌வ‌ர், "எங்க வீட்டைலாம் அடிச்சு உடைச்சுடாங்க‌.. என்னுடைய‌ கையில் கூட‌ காய‌ம். அடிக்கும் போது, நாங்க‌ தான் இங்க‌ ஆட்சில‌ இருக்கோம்" என‌ சொல்லி அடித்த‌தாக‌ கூறினார்.
சாதிவெறி குறித்து காவ‌ல் துறை துணை ஆய்வாள‌ரின் க‌ருத்து:
 "அவ‌ங்க தொட்டியில் இற‌ங்கி குளிக்குறாங்க‌. சிறுநீர், ம‌ல‌ம் க‌ழிக்கிறார்க‌ள். அதனால் தான் பிர‌ச்சினை" என்றார்..
"அதே நீரைத் தானே அவ‌ர்க‌ளும் குடிக்கிறார்க‌ள். அதில் எப்ப‌டி இது போன்ற க‌ரிய‌ங்க‌ளைச் செய்வார்க‌ள்" என்ற எங்க‌ளின் கேள்விக்கு அவ‌ரிட‌ம் ப‌திலில்லை. ஆதிக்க‌ சாதியின‌ரின் அட்டூழிய‌ம் ஏற்ப‌டும் என‌ முத‌ல் நாள் இர‌வே அறிந்தும், ஏன் காவ‌ல்துறை பாதுகாப்பு இல்லை என்ப‌த‌ற்கு, காவ‌ல்துறையின‌ர் அமைச்ச‌ர் வ‌ருகைக்காக‌ சென்ற‌ன‌ர் என்ற ம‌ழுப்ப‌லான‌ ப‌தில் தான் கிடைத்த‌து.
பாதிக்க‌ப்பட்ட‌ ம‌க்க‌ளின் கோரிக்கைக‌ள்:
1) சேரிப்ப‌குதியிலேயே த‌னி ம‌ருத்துவ‌ம‌னை
2) சேரிப்ப‌குதியில் நியாய‌விலைக் க‌டை
3) பிர‌ச்சினைக்குரிய‌ த‌ண்ணீர்த் தொட்டி, த‌லித் ம‌க்க‌ளுக்கென‌ ஒதுக்க‌ப்பட்ட‌ நிதியிலிருந்து க‌ட்டிய‌தால், த‌லித் ம‌க்க‌ளுக்கே உரித்தான‌ தொட்டியாக‌ அதிகார‌ப்பூர்வ‌மாக‌ மாற்றுத‌ல்.
4) பாராப‌ட்ச‌மின்றி ம‌க்க‌ளைத் தாக்கிய‌, ஆதிக்க‌ சாதியின‌ரை வ‌ன்கொடுமை த‌டுப்பு ச‌ட்ட‌த்தின் கீழ் கைது செய்தல்.
5) பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு உரிய‌ நிவார‌ண‌ம்.
6) வாக‌ன‌ங்க‌ள் இழ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு, வாக‌ன‌ங்க‌ளை அர‌சு த‌ன் செல‌வில் த‌ருத‌ல்.

“தீண்டத்தகாத மக்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து விடப்பட்டுள்ள வெளிப்புற மக்களாக உள்ளனர். ஆனால், அவர்கள் தனியாக இருப்பது, பிரித்து வைக்கப்பட்டிருப்பது – அவர்களுடைய விருப்பத்தால் அல்ல. கலந்து வாழ விருப்பமில்லை என்பதற்காக, அவர்கள் தண்டிக்கப்படவில்லை. இந்துக்களுடன் ஒன்றாக சேர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்புவதால்தான் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். வேறு விதமாகச் சொன்னால், யூதர்களின் பிரச்சனையும், தீண்டத்தகாதோரின் பிரச்சனையும் – இப்பிரச்சனை மற்றவர்களால் உருவாக்கப்பட்டவை என்ற அளவில் ஒரே மாதிரியானவை என்றாலும் – சாரம்சத்தில் வெவ்வேறு விதமானவை. யூதர்கள் தாமாகவே விரும்பி, தனித்து வாழ்கிறார்கள். தீண்டத்தகாதோர் கட்டாயமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். தீண்டாமை இம்மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது; இம்மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல.'' – டாக்டர்.அம்பேத்கர், (பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உண்மை அறியும் குழு:
தோழ‌ர்.ஜோஸ்வா ஐச‌க்,
தோழ‌ர்.கெள‌த‌ம் ச‌னா,
தோழ‌ர்.ம‌னோஜ்,
தோழ‌ர்.காசி ஆன‌ந்த‌ன்,
தோழ‌ர்.நில‌வுமொழி செந்தாம‌ரை ( aarthy.senthamarai@gmail.com)
நன்றி தலித் முரசு / கீற்று வலை தளம்

1 comment:

  1. தோழர் இது தலித் முரசு இதழில் வந்த பதிவு கிடையாது...கீற்று தளத்தில் வந்தது அவ்வளவே

    ReplyDelete