தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்?
அக்டோபர் 30-ஆம் தேதி பரமக்குடி அருகே நடைபெற்ற தலைவர் ஒருவரின் நினைவு நாளையொட்டி அங்கு சென்றுவிட்டு திரும்பிய வாகனம் ஒன்றின்மீது மதுரையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு அதன் விளைவாக 7 பேர் இறந்து போனார்கள். பரமக்குடியில் மூவர் படுகொலை செய்யப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஒரே ஜாதியைச் சார்ந்தவர்கள்.
இந்தப் பதற்றம் தணிவதற்கு முன்பாக, நவம்பர் 7-ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி என்னும் ஊரைச் சேர்ந்த நத்தம் காலனியில், நூற்றுக்கணக்கான பேர் கொண்ட கும்பல் நுழைந்து வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டது. அந்தக் காலனியிலிருந்த வீடுகள் அனைத்தையும் கும்பல் அடித்து நொறுக்கிற்று. விலை உயர்ந்த பொருள்கள் மற்றும் வாகனங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
நத்தம் காலனியோடு இந்த வன்முறை வெறியாட்டம் நிற்கவில்லை. அருகிலுள்ள அண்ணா நகர் புதுகாலனி, கொண்டப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்த வீடுகளும் தாக்கப்பட்டன. மொத்தம் 3 கிராமங்களிலும் சேர்த்து 268 வீடுகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம் செய்யப்பட்டன.
இவ்வளவு கலவரத்திற்கும் எது காரணம்? நத்தம் காலனியில் வசித்த இளவரசன் என்னும் இளைஞர் வேறொரு ஜாதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணைக் காதலித்தார். இரு குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் இருவரும் அக்டோபர் 14-ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இதன் காரணமாக பெண்ணின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொண்டார். இது ஆத்திரவயப்பட்டிருந்த ஜாதி மக்களுக்குப் பெரும் கோபமூட்டியது.
ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பிக் காதல் மணம் செய்துகொள்வது இயற்கை. ஆனால், அதுவே ஜாதிக் கலவரங்களுக்குக் காரணமாக அமைவது என்பது எல்லா வகையிலும் நியாயமற்றதாகும்.
பெண்ணின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஆத்திரவயப்பட்டு இளவரசன் வசிக்கும் வீட்டை அல்லது காலனியைத் தாக்கினால் அது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால், அதற்குப் பக்கத்தில் இருந்த கிராமங்களில் வசித்த அதே ஜாதியைச் சார்ந்த மக்களின் வீடுகளும் கொளுத்தப்பட்டது எதைக் காட்டுகிறது?
ஏதோ ஒரு திருமணத்தின் விளைவாக இது நடந்தது என்று சொல்ல முடியாது. மாறாகத் திட்டமிட்டு, குறிப்பிட்ட ஜாதி மக்களின் பொருளாதார நிலையைச் சீரழிக்க வேண்டும் என்பதுதான் இக்கலவரத்துக்கு நோக்கமாகும்.
நத்தம் காலனி உள்பட அருகில் உள்ள குடியிருப்புகளில் வாழும் பெரும்பாலான ஆண்கள் பெங்களூருக்குச் சென்று நன்றாகச் சம்பாதிப்பவர்கள். அந்தப் பணத்தின் சேமிப்பை வீடாக, வாகனங்களாக, நகைகளாக மாற்றி தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பொறுக்க முடியாதவர்கள்தான், கலப்புத் திருமணத்தைக் காரணமாகக் காட்டி இந்தக் கலவரத்தை நடத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
திடீரென மூண்ட கலவரமாக இது இருக்க முடியாது. அக்டோபர் 14-ஆம் தேதி இளவரசனும்-திவ்யாவும் பதிவுத் திருமணம் செய்துகொண்டு காவல்துறையை அணுகிப் பாதுகாப்பும் பெற்றுள்ளனர். எனவே இந்தத் திருமணம் அந்த வட்டாரத்தில் சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில், திருமணம் நடந்து 23 நாள்களுக்குப் பிறகே நவம்பர் 7-ஆம் தேதி கலவரம் வெடித்துள்ளது. எனவே, தக்க சமயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குக் காவல்துறை அடியோடு தவறிவிட்டது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
மேற்கண்ட ஜாதிக்கலவரங்கள் தமிழகத்திற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டன. வடமாநிலங்களில் அடிக்கடி மூளும் மதக்கலவரங்கள், ஜாதிக்கலவரங்கள் போன்றவை இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவந்த காலம் மறைந்துவிட்டது.
வெண்மணி, கொடியங்குளம், திண்ணியம், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் முதலிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இப்போது தர்மபுரி மாவட்டத்தில் ஜாதியின் பெயரால் கலவரம் மூண்டுள்ளது.
பிறப்பின் அடிப்படையில் ஜாதி தீர்மானிக்கப்படுகிறது. ஒருவன் மதம் மாறலாம், ஆனால், ஜாதி மாறமுடியாது என்ற நிலைமை நிலவுகிறது. ஆனால் இன்றைய தமிழகத்தில், "பிறப்பினால் மட்டுமே சமூக வாழ்வின் சிறப்பு தீர்மானிக்கப்படுகிறது' என்னும் புரையோடிப்போன மூடநம்பிக்கை ஆழமாக வேரூன்றியுள்ளது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார் வள்ளுவர்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என முழங்கினார் திருமூலர்.
"ஜாதி இரண்டொழிய வேறில்லை', "இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்' எனப் பாடினார் அவ்வை.
"ஜாதிகள் இல்லையடி பாப்பா' என முரசு கொட்டினார் பாரதி.
63 சைவ நாயன்மார்களில் 5 பேர் ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். 12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரும் அவ்வாறே. சைவ, வைணவக் கோயில்களில் இவர்களுக்குச் சிலைகள் வைக்கப்பட்டு பூசிக்கப்படுகின்றனர்.
சித்தர்கள் முதல் வள்ளலார் வரை ஜாதிச் சழக்கர்களை மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர். ஜாதிப் பாகுபாடற்ற சமரச நிலைச் சமுதாயத்தை உருவாக்க அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். ஆனால், இன்று அவர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் ஜாதி வெறி நச்சரவங்கள் தலைதூக்கிப் படமெடுத்து ஆடுகின்றன.
இந்தியக் குடியரசுத் தலைவராக ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கே.ஆர். நாராயணன் பதவி வகிக்க முடிகிறது. ஆனால், ஊராட்சிமன்றத் தலைவராக ஒரு ஒடுக்கப்பட்டவர் வருவதைச் சகித்துக்கொள்ள மறுக்கும் சூழ்நிலை சில ஊர்களில் இன்னமும் நீடிக்கிறது.
தென்னாப்பிரிக்க வெள்ளையரசின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக ஐ.நா. பேரவையில் இந்தியா போராடி இறுதியில் தென்னாப்பிரிக்காவை உலகப் புறக்கணிப்புக்கு ஆளாக்கியது.
ஆனால், நிறவெறியைவிட மோசமான தீண்டாமை, இந்திய நாட்டில் இன்னமும் தொடர்கிறது. நீண்ட நெடுங்காலமாக இந்திய நாட்டிற்கு இழிவைத் தேடித்தரும் பிரச்னையாக ஜாதியம் இருந்து வந்துள்ளது. ஜாதியம் இன்றைக்கு நமது ஜனநாயக அமைப்பிற்கே சவால் விடும் நிலைமையில் வளர்ந்துகொண்டிருக்கிறது.
தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு ஜாதியினருக்கு இடையேதான் அடிக்கடி மோதல் நிகழ்கிறது. ஆனால், காவிரிச் சமவெளி மாவட்டங்களில் இதே இரு ஜாதியினரும் வாழ்கிறார்கள். ஆனால், அங்கு ஜாதி மோதல்களோ, கலவரங்களோ அறவே இல்லை. இது ஏன் என்பது சிந்தனைக்குரிய கேள்வியாகும்.
தென்மாவட்டங்களில் வாழும் மக்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் வறண்ட பகுதிகளில் வாழ்பவர்கள். அவர்களுக்கு வாழ்வாதாரம் என்பது மிகமிகக் குறைவு. இந்தச் சூழ்நிலையில் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள்.
ஆனால், காவிரிச் சமவெளி மாவட்டங்கள் செழிப்பானவை. எந்தச் ஜாதியினராக இருந்தாலும் அவர்களின் பொருளாதார நிலைமை நன்றாக இருக்கிறது. எனவே மோதல்களுக்கு இடமில்லை.
மண்டல் கமிஷன் இடஒதுக்கீடு பற்றிய தனது ஆய்வறிக்கையில், மேற்கு வங்காளத்திலும், கேரளத்திலும் செய்யப்பட்டுள்ள நிலச் சீர்திருத்தங்கள் ஜாதி ஆதிக்கத்தைத் தகர்க்க உதவி உள்ளதாகவும் இதுதான் சரியான தீர்வு என்றும் பாராட்டியுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தீண்டாமைக் கொடுமைகளோ, ஜாதிய மோதல்களோ வெளிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற கலவரங்கள் இந்தக் கருத்துக்கு எதிராக உள்ளன. பொருளாதாரத்தில் ஏற்றமடைந்த ஜாதிமீது மற்றொரு ஜாதி பொறாமை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தியாவில் வேறெந்த மாநிலத்தையும்விட ஜாதிய எதிர்ப்பு முழக்கம் தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாக ஒலித்தது. ஆனால், அவை வெற்று முழக்கங்களாக அமைந்தனவே தவிர, செயல்பாட்டுக்கு உரியவைகளாக மாற்றப்படவில்லை என்பதைத்தான் தர்மபுரி சம்பவம் எடுத்துரைக்கிறது.
தமிழ்நாட்டில் ஜாதி அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணிகள் பெரும்பாலும் வெற்றிபெறவில்லை. அரசியல் அடிப்படையில் உருவான கூட்டணிகள்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. ஜாதி அடிப்படையில் அமைக்கப்பட்ட கட்சிகளும் ஏதாவது ஒரு அரசியல் கூட்டணியில் சேர்ந்து சில இடங்களில் வெற்றிபெற முடிகிறதே தவிர, அவர்கள் தனியாக நின்று தங்கள் ஜாதி வாக்குகளின் பலத்தினால் வெற்றி பெறுவது இல்லை. இதை நாம் நடைமுறையில் பல தேர்தல்களில் பார்த்தோம். ஆனால், ஜாதி கடந்து அரசியல் காரணங்களுக்காக மக்கள் அளித்த ஆதரவைப் பயன்படுத்தி ஆட்சி பீடத்திற்கு வந்தவர்கள் அமைச்சரவைகள் அமைக்கும்போது ஜாதிவாரியாக அமைச்சர்களை நியமித்தார்கள்.
சர்வீஸ் கமிஷன் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசு தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் போன்ற முக்கியமான பதவிகளுக்குரிய நியமனங்களையும் ஜாதி அடிப்படையில் செய்து அதை விளம்பரப்படுத்தி, அந்தந்த ஜாதி மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளும் வெட்கமில்லாமல் மேற்கொள்ளப்பட்டன, இன்னமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜாதிச் சங்கங்களின் நிகழ்ச்சிகளில் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் தங்குதடையில்லாமல் கலந்துகொண்டு ஜாதிக்கு உரமூட்டினர். அரசு ஊழியர்களே ஜாதிய ரீதியான சங்கங்களை அமைக்கத் தொடங்கும் போக்கு வளர்ந்தது.
ஜாதித் தலைவர்களின் பெயரால் மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றை அமைக்கும் மலினமான முயற்சியும் நடைபெற்று அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த ஜாதி மக்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என பகுத்தறிவுப் பாசறையில் பயின்றவர்கள் நம்பியது நகைப்புக்கிடமாக அமைந்தது. ஆனால் இது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தி பல்வேறு ஜாதிகளுக்கிடையே மோதலை உருவாக்கிற்று.
இதன் காரணமாக ஜாதிக்கலவரங்கள் வெடித்தவுடன், மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சூட்டப்பட்ட ஜாதிப் பெயர்களை அவசர அவசரமாக நீக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தேர்தல்களில் ஆதாயம் தேடும் ஒரே நோக்கத்துடன் கொஞ்சங்கூட தொலைநோக்குப் பார்வை இல்லாமல் அரசுப் பொறுப்பில் இருந்தவர்கள் நடந்துகொண்ட முறைதான் ஜாதிக்கலவரங்கள் தொடர்வதற்கு அடிப்படைக் காரணமாகும்.
கடந்த காலத்தில் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு தங்களின் தொண்டு, தியாகம் ஆகியவற்றினால் மக்களிடையே மதிப்புப் பெற்ற பல தலைவர்கள் மறைந்த பிறகு அந்தத் தலைவர்களை ஜாதி வட்டத்திற்குள் குறுக்கும் வெட்ககரமான நடவடிக்கைகள் பகிரங்கமாகத் தொடர்கின்றன. இன்றைய ஜாதிச் சங்கங்களின் தலைவர்கள் பலருக்கும் சொந்த முகமில்லை. மறைந்த தலைவர்களை முகமூடிகளாகப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் செல்வாக்கை வளர்க்க முயலுகிறார்கள்.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சமுதாய வளர்ச்சிக்கான சமுதாயக் கொள்கை இருக்க வேண்டும். அப்போதைக்கு அப்போது ஜாதி உணர்வுகளுக்குத் தீனிபோடும் வகையில் சில சலுகைகளை அறிவிப்பது நிரந்தரமான பயனைத் தராது. ஜாதிகளைக் கடந்து சகல மக்களுக்கும் பயனளிக்கக்கூடியதுமான ஒரு கொள்கைத் திட்டம் இல்லாததன் விளைவே, ஜாதிய மோதல்களுக்குக் காரணமாகும். இந்தப் போக்கு அடியோடு மாற்றப்பட வேண்டும்.
வெளிநாடுகளுக்குக் கொத்தடிமைகளாகப் போன தமிழரின் நிலை குறித்து "விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்?' என பாரதி மனம் நொந்து பாடினார். பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் பாடிய பாடல் வரிகள் இப்போது தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்துவதாக உள்ளன. ஜாதிகளைத் துறந்து தமிழ் ஜாதியாக நாம் அனைவரும் இணைவோம், ஜா""தீ''யை அணைக்க ஒன்றுபடுவோம்.
நன்றி : தினமணி நாள் 5.12.12
No comments:
Post a Comment